நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியை சீரமைக்க கோரிக்கை

திருப்பூர், ஆக. 22: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நகருக்கு மத்தியில் பெரிய பரப்பளவில் உள்ள இப்பள்ளியில், தொடர் பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியில் இருந்த, மூன்று கம்ப்யூட்டர்கள், வெப் கேமரா, ஒரு பிரிண்டர் ஆகியவை திருடி செல்லப்பட்டன. தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, அவலகம் என அனைத்து அறைகளுக்குள்ளும், திருடர்கள் எளிதாக நுழையும் வகையில், கட்டடம், பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது.

மேலும் ஆயிரக்கக்கான மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், சுத்தம் செய்வது குறித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது பெரும்பாலான வகுப்பறைகளில் ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் மழை நீர் வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது. இப்பள்ளிக்கு, திருப்பூரில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் முக்கிய நபர்கள், தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வருகின்றனர். இதற்காக தனி அமைப்பு ஏற்படுத்தி, பள்ளியின் அவல நிலையை போக்க முன் வர வேண்டுமென, சமூக ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது.

Related Stories: