நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

திருப்பூர், ஆக. 22:திருப்பூர் மாநகர் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் உள்ள சீமைகருவேலம் மரம், செடி, கொடிகளால் புதர்மண்டி கிடக்கிறது. சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகர் பகுதிகளில் ஜம்மனை ஓடை, சங்கிலி பள்ளம், நல்லாற்றங்கரை ஆகிய நீரோடைகளில் 50க்கு மேற்பட்ட கிராமங்களில் பயணித்து இறுதியில் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. நீரோடைகளின் இரு புறமும் உள்ள கரைகளை ஆக்கிரமித்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். நீரோடைகளில் சீமை கருவேலம் மரம், செடி, கொடி, மரங்கள் உள்ளிட்டவை வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் கட்டிட கழிவுகள், ஓட்டல் கழிவுகள் நீரோடைகளில கொட்டப்படுகின்றன. இதனால், சாக்கடை கழிவு நீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுக்கு முன் பெய்த கடும் மழையால் குளம், குட்டைகள், அணைகள் நிறைந்து நீரோடைகள், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், நீர் வழி ஓடைகளில் அடர்த்தியாக வளர்ந்துள்ள சீமை கருவேலம் உள்ளிட்ட  மரங்களால் மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பின்னலாடை நிறுவனங்களுக்குள் வௌ்ளம் புகுந்தது. இதில் பல கோடி மதிப்புள்ள பின்னலாடை இயந்திரங்கள் நீரில் மூழ்கியது. இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து ஜம்மனை ஓடை, சங்கிலி பள்ளம் ஓடை ஆகியவற்றில் உள்ள சீமைகருவேலம் மரம், ஆக்கிரமிப்பு குடிசை உள்ளிட்டவற்றை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர். தற்போது, நீரோடைகளில் இருபுறமும் வீடுகள் ஆகிரமித்து அமைத்துள்ளனர். இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜம்மனை ஓடை, சங்கிலி பள்ளம் ஓடை, நொய்யல் ஆறு ஆகியவற்றில் உள்ள சீமைகருவேலம் மரம் உள்ளிட்டவற்றை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: