பனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர்

சேலம், ஆக.22: சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, மல்லூர், மன்னார்பாளையம், வாழப்பாடி, ஆத்தூர், வலசையூர், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரளிப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் அரளிப்பூ சேலம் வ.உ.சி., மார்க்கெட் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும், பெங்களூர் உள்ளிட்ட பூ மார்க்கெட்டுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அரளிப்பூ அமோக விளைச்சல் தந்துள்ளது. நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து பனமரத்துப்பட்டி விவசாயிகள் கூறியதாவது:  சேலம் மாவட்டத்திலேயே, பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தான் அரளிப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரளிப்பூவை பொறுத்தமட்டில் ஆண்டு முழுவதும் விளைச்சல் இருக்கும். தற்போது பெய்து வரும் மழையால், அரளிப்பூ அமோகமாக  பூத்துள்ளது. பூக்களை பறிக்க ஒரு கிலோவுக்கு ₹30 கூலி வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ அரளிப்பூ ₹20 தான் விற்கப்படுகிறது. இந்த பூவை பொறுத்தவரை செடியில் இருந்து பறிக்காவிட்டால், அடுத்த நாள் பூக்காது. ஒவ்வொரு நாளும் பூக்களை பறித்துவிட வேண்டும். செடியில் இருந்து தானாகவும் பூ விழாது. எனவே தான், அதிக கூலி போனாலும் பரவாயில்லை என்று தினமும் பூ பறித்து வருகிறோம். இந்த விலை சரிவு என்பது தற்காலிகம் தான். இன்னும் ஒரு சில நாட்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. அப்போது பூக்களின் தேவை அதிகரிக்கும். அதனால் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories: