கூடுதல் லாபம் கிடைப்பதால் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

நாமக்கல்,  ஆக.22:  காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதால்,  நாமக்கல் மாவட்ட  விவசாயிகள் பந்தல் வகை காய்கறி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நாமக்கல்  மாவட்ட விவசாயிகள் நெல், வாழை, கரும்பு, மரவள்ளி, சின்ன வெங்காயம், பயறு  வகைகள் வெற்றிலையும், கொல்லிமலையில் அன்னாசி, பலா, காபி மற்றும் மிளகு  உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர். தவிர, நேரடியாகவும், சொட்டுநீர்  பாசனம், தெளிப்புநீர் பாசனம், குடில் அமைத்தும், தார்பாலின் அமைத்து  அதிகளவில் தக்காளி, கத்திரி, வெண்டை, முட்டை கோஸ், புடலங்காய், பீர்க்கன்,  பூசணி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி  செய்து வருகின்றனர்.

குறிப்பாக  பீர்க்கன், பாகல், புடலை, சுரை மற்றும் அவரை ஆகிய காய்கறிகளை தற்போது  பந்தல் அமைத்து சாகுபடி செய்கின்றனர். இதற்கு தமிழக அரசு தோட்டக்கலைத்துறை  மூலம் ஹெக்டேர் ஒன்றுக்கு 2 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. இந்த  மானியத்தின் மூலம் பந்தல் அமைப்பது, சொட்டுநீர் பாசனம் அமைப்பது, விதை  நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். திருச்செங்கோடு, ராசிபுரம்,  நாமக்கல், மோகனூர், நாமகிரிபேட்டை, பரமத்தி என பரவலாக பந்தல் காய்கறி  சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டு முழுவதும் பந்தல் வகை  காய்கறிகளை சாகுபடி செய்யலாம் என்பதாலும், உள்ளுர் உழவர் சந்தை, வாரச்சந்தை  மற்றும் மார்க்கெட்டுகளில் பந்தல் வகை காய்கறிகளுக்கு நல்ல விலை  கிடைப்பதால், விவசாயிகள் இதன் பரப்பளவை தற்போது அதிகப்படுத்தி வருகின்றனர்.  மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி  நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: