சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்தும் திட்டம் அமல்

தர்மபுரி, ஆக.22: தர்மபுரி உள்பட 5 மாவட்டங்களில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், 9 நுண்ணூட்ட சத்து அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என, உயர்கல்வி அமைச்சர் சத்துணவு சங்க மாநாட்டில் பேசினார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின், மாவட்ட மாநாடு தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், ‘முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1982ம் ஆண்டு துவங்கப்பட்ட மதிய உணவு திட்டம், தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், 1389 பள்ளிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 654 மாணவ, மாணவிகளுக்கு 13 வகையான உணவு, முட்டையுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

171 பணியாளருக்கு ஓய்வூதிய பலனாக 1.08 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற 1482 பணியாளர்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தர்மபுரி உள்பட 5 மாவட்டங்களில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் 9 நுண்ணூட்ட சத்து அடங்கிய, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது,’ என்றார். இந்த விழாவில், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி,  அரசு அலுவலர் கழக சி அன்டு டி மாநில தலைவர் சௌந்தர்ராஜன், சத்துணவு திட்ட நேர்முக உதவியாளர் வேதநாயகம், மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொது ெசயலாளர் சிவாஜி, பொருளாளர் ஏசாயா குருபாதம், மாநில துணை தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: