காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஒகேனக்கல் குடிநீர் மீண்டும் விநியோகம்

தர்மபுரி, ஆக.22: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், காவிரி ஆற்றிலிருந்து 3 ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து, சுத்திகரிக்கப்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்துக்கு 600 லட்சம் லிட்டர் குடிநீரும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 350 லட்சம் லிட்டர் குடிநீரும் தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கனமழையால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதிகபட்சமாக கடந்த 12ம் தேதி, நீர்வரத்து 3 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 10ம் தேதி ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யும் மின் மோட்டார்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால், தர்மபுரி மாவட்டத்தின் கிராம பகுதிகளில், ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன், கடந்த 13ம் தேதி ஆற்றில் உள்ள 2 மின்மோட்டார்கள் இயக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியது. கடந்த 19ம் தேதி தர்மபுரி மாவட்டத்துக்கும், நேற்று முன்தினம்(20ம் தேதி)கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு, இருதினங்களுக்கு ஒருமுறையும், அதன் பின்னர் ஆற்றில் உள்ள 3 மின் மோட்டார்களையும் இயக்கி, தினசரி குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: