மாவட்டம் முழுவதும் 24.83 கோடியில் 361 ஏரிகள், குளங்களில் குடிமராமத்து பணிகள்

தர்மபுரி, ஆக.22: தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 361 ஏரிகள், குளங்கள் 24.83 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடந்து வருவதாக, மத்திய குழு தலைவர் இந்தர் தமீஜா தெரிவித்தார். தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் மழை நீர் சேகரிப்பு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நடந்தது. மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளரும், மத்தியக்குழு தலைவருமான இந்தர் தமீஜா தலைமை வகித்தார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். மத்திய குழுவினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் குழுவின் தலைவர் இந்தர் தமீஜா பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம், தற்போது 10 ஏரிகள் 4.97 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சார்பில், 200 ஏரிகள் 161 குளங்கள் என மொத்தம் 361 ஏரிகள், குளங்கள் ₹24.83 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது. தர்மபுரி சனத்குமார நதியில் 42.82 கிலோமீட்டர் தொலைவிற்கு, குடிமராமத்து பணி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சனத்குமார் நதியின் பெரும்பகுதி தூர்ந்து போயும், ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டும் உள்ளது. இந்த நதியில் நிலத்தடி நீரை செறிவூட்ட 383 மூழ்கு குழிகள், 184 செறிவூட்டு குழிகள், 36 செறிவூட்டு கிணறுகள், 52 கம்பிவலை கல் தடுப்பணைகள், 36 கான்கிரீட் தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மண் தன்மைக்கு ஏற்ப, முறையான திட்டங்களை வகுத்து மரக்கன்று வைத்து வளர்க்க வேண்டும். ஆறுகளின் குறுக்கே அதிக அளவில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீர் சேமிப்பதுடன், நிலத்தடி நீரை சேமிக்க இயலும். மேலும் நீர் செறிவூட்ட முடியும். இவ்வாறு அவர் ேபசினார். இதை தொடர்ந்து, தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 3,350 மாணவிகள் மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்ட பணிகள், மழைநீர் சேகரிப்பு பணிகளை, மத்திய அரசு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, நுண்ணீர் பாசன முறைகள், சொட்டு நீர் பாசன முறைகள், நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

Related Stories: