மாவட்டத்தில் சீதோஷ்ணநிலை மாற்றம் சளி, காய்ச்சலால் பொதுமக்கள் அவதி

தர்மபுரி, ஆக.22: தர்மபுரி மாவட்டத்தில் சீதோஷ்ணநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், சளி, காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் மக்கள் அவதிப்படுகின்றனர். உஷார் நிலையில் சுகாதாரத்துறையின் மருத்துவ குழு உள்ளது. 251 கிராம ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை தூய்மைசெய்து, விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 51 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 219 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இதில் தொப்பூர், காரிமங்கலம், மொரப்பூர், மாரண்டஅள்ளி, பையர்நத்தம், கடத்தூர், பாளையம்புதூர் ஏரியூர் உள்ளிட்ட 8 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். மீதமுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பகலில் மட்டும் இயங்குகின்றது. இதில், 2 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். 89 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது, சீதோஷ்ணநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் சலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவதும் அதிகரித்துள்ளது. ஒரே கிராமங்களில் காய்ச்சல் தாக்கம் அதிகமாக இருந்தால், சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு உடனடியாக அனுப்பி வைத்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க, வட்டாரங்கள் வாரியாக மஸ்தூர்கள் (பணியாளர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வட்டாரத்திற்கு 30 மஸ்தூர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டாரங்களில் 240 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, பொம்மிடி, கம்பைநல்லூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் தலா 10 மஸ்தூர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 340 மஸ்தூர்கள் மற்றும் 89 சுகாதார ஆய்வாளர்கள் கொசு ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொசு புகை அடித்தல், மருந்து தெளித்தல், டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட நீர் தேங்கும் பொருட்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த மூன்று நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட துணை சுகாதார துறை இயக்குனர் ஜெகதீசன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் தற்போது காய்ச்சல் தாக்கம் அதிகம் இல்லை. இருந்தாலும் பருவமழையை கருத்தில் கொண்டு, நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். நகராட்சி, வட்டாரம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சுமார் 500பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புகை மற்றும் மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வசிக்கும் இடங்களை, தூய்மையாகவும், மழைநீர் தேங்கி நிற்காமல் பாதுகாத்துக்கொள்ள ேவண்டும். வீணாகும் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைக்கக்கூடாது. உடனுக்குடன் குப்பை தொட்டியில் போட வேண்டும். காய்ச்சல் தாக்கம் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மழையின் புதிய நீர் தற்போது விநியோகம் செய்யப்படுவதால் காய்ச்சல், சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று ஊராட்சிகளின் நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளோம். அதன்படி அனைத்து குடிநீர் நீர்தேக்க தொட்டிகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சுத்தம் செய்து குடிநீர் தேக்கி விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: