தொடர்மழை எதிரொலி பொன்னி விதை நெல் விலை உயர்வு

திருவள்ளூர், ஆக. 22: நடப்பு சம்பா பருவத்தில் பொன்னி நெல் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், பொன்னி விதை நெல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இருப்பினும் தற்போது பெய்து வரும் மழையால் முன்பதிவு செய்து காத்திருந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.நன்றாக மழை பெய்யும் ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பொன்னி நெல் நடவு செய்வது வழக்கம். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடிக்கான பொன்னி நெல் நாற்று விடுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக மழையின்றி பொன்னி நெல் நடவு 30 சதவீதமாக குறைந்தது.இந்த ஆண்டு மழை பெய்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் நம்பிக்கை அடைந்துள்ள பெரும்பாலான விவசாயிகள், பொன்னி நெல் நடவு செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நடவு செய்யாததால், விவசாயிகளிடம் பொன்னி விதை நெல் இருப்பு இல்லை. அரசு வேளாண்மைக் கிடங்குகளில் மற்ற ரக நெல் விதைகள் மட்டுமே கிடைக்கின்றது.

 இதனால், பொன்னி நெல் விதைகளை விவசாயிகள் தனியார் நெல் மண்டிகளிலும், கடைகளிலும் வாங்கி வருகின்றனர். தற்போது பொன்னி விதை நெல்லுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரத்தில் இதன் விலை ‘’கிடு கிடு’’வென உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ 46 ரூபாய்க்கு (75 கிலோ மூட்டை 3,500 ரூபாய்) விற்பனையான பொன்னி விதை நெல் நேற்று கிலோ 53 ரூபாய்க்கு விற்பனையானது. இருப்பினும் முன்பதிவு செய்து இரண்டு மூன்று நாள் காத்திருந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories: