மளிகைக்கடைக்காரர் கொலையில் 9 பேர் கைது; நால்வருக்கு வலை

காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் பட்டாக் கத்தியுடன் வந்த ரவுடி கும்பல் தாக்கியதில் மளிகைக்கடைக்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் கோவிந்தவாடி அகரம் உள்ளது. இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரவுடி புருஷோத்தமன் மற்றும் கூட்டாளிகள் பட்டாக் கத்தியுடன், கோவிந்தவாடி அகரம் சென்று, ஊரை சூறையாடியதில் மளிகைக் கடைக்காரர் தனஞ்செழியன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தடுக்க வந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.மேலும், கோவிந்தவாடி அகரத்தில் இருந்து கம்மவார்பாளையம், புள்ளலூர், தக்கோலம் வழியாகச் சென்ற 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் வழியில் சென்றவர்களை எல்லாம் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிளை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், ரவுடி புருஷோத்தமன் மற்றும் கூட்டாளிகள் அரக்கோணத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் தனிப்படை போலீசார் அரக்கோணம் சென்று,  அங்கு பதுங்கி இருந்த கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்த ரவுடி புருஷோத்தமன் (35), விஜயகுமார் (25), சுதாகர் (23), சித்தேரிமேடு லோகேஷ் (20), பள்ளூர் சரத்குமார் (25), ஊவேரிசத்திரம் மதிவாணன் (25), அம்மங்குளம் ராஜா (21), நெட்டேரி விஜி (25), கூரம் பிரபு (28) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.பின்னர் அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அதில், மகாதேவன் மீது இருந்த முன்விரோத்தில் அவரை தீர்த்துக் கட்ட வந்ததாகவும், தனஞ்செழியன் தடுத்ததால் ஆத்திரத்தில் அவரை வெட்டிக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.தொடர்ந்து போலீசார், 9 பேரையும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: