முன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக

திருவொற்றியூர்: எண்ணூர் விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி, மாநகர பேருந்து, கார், பைக் என்று தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சுங்கச்சாவடி முதல்  ராமகிருஷ்ணா நகர் வரை சுமார்  ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் விளக்குகள் இல்லை.  இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக திருவொற்றியூர் குப்பம்,  பட்டினத்தார் கோயில் குப்பம், கே.வி.கே. குப்பம் பகுதிகளில் முற்றிலுமாக விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இடத்தில் மக்கள் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போதோ  அல்லது வாகனங்களில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து எண்ணூர் விரைவு சாலையில் சூரிய நாரயண சாலை முதல் ராமகிருஷ்ணா நகர் வரை எண்ணூர் விரைவு சாலையில் ₹2.72 கோடி மதிப்பீட்டில் 844 மின் விளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி  துவக்க விழா நேற்று எண்ணூர் விரைவுச்சாலை, நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் நடைபெற்றது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். மின் பிரிவு அதிகாரிகள் இளங்கோ, ராதாகிருஷ்ணன்,  அதிமுக பகுதி செயலாளர் கிருஷ்ணன் நிர்வாகிகள் டி.என்.செல்வம், தனரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே தெருவிளக்கு திட்ட பணியை  கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி திருவொற்றியூர் குப்பத்தில் முன்னாள் எம்எல்ஏ குப்பன் துவக்கி வைத்தார். இதற்காக தெருவிளக்கு பணி துவக்க விழா என திருவொற்றியூர் முழுவதும் போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அப்போது  மந்திரங்கள் ஓதி, பூஜைகள் செய்யப்பட்டு அந்த இடத்தில் பணியை குப்பன் துவக்கி வைத்தார். ஆனால் இந்த விழாவை அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், பகுதி செயலாளர் கிருஷ்ணன்  மற்றும் பல வட்ட செயலாளர்கள் புறக்கணித்து பங்கேற்கவில்லை. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இப்பணியை துவக்கி வைத்துள்ளார். விழாவில் முன்னாள் எம்எல்ஏ குப்பன் பங்கேற்கவில்லை. இதனால் திருவொற்றியூரில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலால் ஒரே திட்டத்திற்கு அமைச்சர்  ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ குப்பன் தனித்தனியாக போஸ்டர் ஒட்டி விழா நடத்தியுள்ளனர்.

Related Stories: