திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே கழிப்பிடம் அமைக்க புதிய குழாய் பதிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் 10வது வார்டு தியாகராஜ சுவாமி கோயில் அருகே உள்ள குளக்கரை தெருவில் இலவச கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை திருவொற்றியூர்  மண்டலம் சார்பில் புதுப்பிக்கப்பட்டு துப்புரவு பணியாளர்கள் மூலம்  பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கழிப்பறையை தினமும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள்  என்று ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள மின் மோட்டார் சரியாக செயல்படாததால் தண்ணீர் வரவில்லை.  இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தண்ணீர் இல்லாமல் இந்த கழிப்பிடம் பூட்டி கிடப்பதோடு சுத்தம் செய்யப்படாததால் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது. இதுகுறித்து ஆகஸ்ட் 5ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் முருகன் தலைமையில் அதிகாரிகள்   குளக்கரை தெருவில் உள்ள கழிப்பிடத்தை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அங்கு நிலத்தடிநீர்  மட்டம் குறைந்து இருப்பதால்  சுமார் 100 அடி ஆழத்திற்கு ராட்சத குழாய் போட்டு அதில் இருந்து  நீரை எடுத்து கழிப்பிடத்திற்கு  பயன்படுத்த திட்டமிட்டனர். இதன்படி இந்த குழாய் போடும் பணி நேற்று  நடைபெற்று, பொது கழிப்பிடத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. விரைவில் குளக்கரை தெருவில் உள்ள  ஈம சடங்கு செய்யும் காரிய மேடைக்கும் இதேபோன்று புதிய குழாய்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நாள் பொதுக்கழிப்பிட தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திய  திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி கூறினர்.              

Related Stories: