சத்துணவு, கால்நடைத்துறையில் 3,500 காலியிடங்கள் நிரப்புவது எப்போது? பணிச்சுமையில் ஊழியர்கள் தவிப்பு

சிவகங்கை, ஆக. 20:  சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சத்துணவு காலிப்பணியிடங்கள், ஆயிரத்து 500 கால்நடை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடாததால் பணிகள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுமார் ஆயிரத்து 320 பள்ளிகள் உள்ளன. இதில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்டோர் சத்துணவு வழங்கும் பணிக்கு நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக சத்துணவுத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் பல பணியாளர்கள் கூடுதல் பொறுப்பாக பல பள்ளிகளை கவனித்து வருகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பதால் சத்துணவு வழங்கும் பணி பெயரளவிற்கே நடக்கிறது. இதுபோல் மாவட்ட கால்நடைத்துறையில் உதவியாளர் பணியிடங்கள் ஆயிரத்து 500 காலியாக உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் நேர் காணல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் நிர்வாக காரணங்களுக்காக எனக்கூறி நேர்காணலை ரத்து செய்தனர். அதன் பின்னர் இதுவரை அப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை இல்லை. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் பணியிடங்கள் நிரப்புவது கேள்விக்குறியாகி உள்ளது. ஆளும் கட்சியினரின் தலையீட்டால் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது: ஏற்கனவே ஓர் ஆண்டிற்கு முன் நேர்காணல் நடத்தப்பட்ட பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. ஒரே ஊழியர் பல மைங்களை பார்ப்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பதால் சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு வழங்குவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்றனர். கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆளும் கட்சியினர் சொல்வது போல் பணி நியமனம் செய்தால் அலுவலர்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். இதனால் நிம்மதியாக ஓய்வு பெற முடியாமல் நடவடிக்கைக்கு ஆளாவோம். இதனால் நிர்வாக காரணம் எனக்கூறி நேர்காணலை ரத்து செய்தோம் என்றனர்.

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் உள்ளனர். இருக்கும் பணிகளுக்கும் நியமனம் செய்வதில் ஆளும் கட்சியினர் தலையீட்டால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கிராபைட், ஸ்பைசஸ் பூங்கா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளே இதற்கு காரணம். இந்த நிறுவனங்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: