குப்பை மேடாக மாறிய புலியடிதம்மம்

காளையார்கோவில், ஆக.20: காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புலியடிதம்மம் கிராமத்தைச சுற்றிலும் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகின்றது. உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புலியடிதம்மம் ஊராட்சியை சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன அக்கிராமங்களில் இருந்து அனைத்து தேவைகளுக்கும் புலியடிதம்மத்திற்கு வரவேண்டும். இதனால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை, புலியடிதம்மம் ஊரணி, பஸ் நிலையம், வைத்தியர் பஸ் நிறுத்தம் மற்றும் சுற்றியுள்ள தெருக்களின் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகப்படியாக உள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தற்போது மழைகாலம் என்பதால் கொசுக்கள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பைகளைத் தடுக்கும் வகையில் புலியடிதம்மம் ஊராட்சியில் அனைத்து இடங்கலும் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். குப்பைகளை அடிக்கடி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘புலியடிதம்மம் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக சாலைவசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் செல்ல வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றார்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள் இருந்தபோது மக்கள் குறைகளை அறிந்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றி வந்தனர். தற்போது இதுபோன்ற குறைகளை அதிகாரிகளிடம் கூறினாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பொது மக்களின் நலன் கருதி உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.

Related Stories: