விவசாயிகள் திரட்டிய நிதியில் சோழன்மாளிகை வாய்க்காலில் தூர்வாரும் பணி துவக்கம்

கும்பகோணம், ஆக. 20: விவசாயிகள் திரட்டிய நிதியில் சோழன்மாளிகையில் உள்ள பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி துவங்கியது.கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகையில் உள்ள பாசன வாய்க்கால், திருமலைராஜன் ஆற்றிலிருந்து புதுப்படையூர் கிராமத்தில் பிரிந்து சோழன்மாளிகை, திருமேற்றழிகை, கோபிநாதபெருமாள், தென்னூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சென்று மற்றொரு வாய்க்காலில் இணைந்து விடுகிறது. இந்த பாசன வாய்க்காலை கடந்த பல ஆண்டுகளாக தூர்வாராததால் செடி, கொடிகள் மண்டி, கருவேல மரங்களால் வாய்க்கால் முழுவதும் தூர்ந்து வாய்க்கால் இருக்கும் தடமே மறைந்து போனது. இதனால் திருமலைராஜன் ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வாய்க்கால்கள் தூர்ந்து போனதால் தண்ணீர் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற அவலநிலையால் 10 கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஆழ்குழாய் மின்மோட்டாரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கா்நாடகாவில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் திருமலைராஜன் ஆற்றி் தண்ணீர் திறந்து விடும்போது, சோழன்மாளிகை பாசன வாய்க்காலில் தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக சோழன்மாளிகையில் உள்ள விவசாயிகள் ரூ.25 ஆயிரம் வரை நிதி திரட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் புதுப்படையூர் பாசன வாய்க்காலின் நீர் வரும் பாதையான தலைப்பு பகுதியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சோழன்மாளிகை விவசாய சங்க தலைவர் செல்லப்பா கூறுகையில், சோழன்மாளிகை பாசன வாய்க்காலை தூர்வார வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறை மாவட்ட நிர்வாகம் தூர்வாரவில்லை என்றால் விவசாயிகள் அனைவரும் நிதியளித்து தூர் வாருவோம் என்று தகவல் கொடுத்தோம். அதற்கு பொதுப்பணித்துறையினர், எங்கள் துறை மூலம் தூர்வாரி தருகிறோம் என்றனர்.ஆனால் கல்லணையில் தண்ணீர் திறந்து விட்டும் வாய்க்காலை தூர்வாரவில்லை. இதனால் விவசாயிகள் அனைவரும் நிதி திரட்டி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தூர்வாருகிறோம் என்றார்.

Related Stories: