உடுமலையில் ரூ.25.92 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் நேரில் ஆய்வு

உடுமலை,ஆக.20:உடுமலை அருகே உள்ள புக்குளத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.25.92 கோடி மதிப்பீட்டில் 320 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உடுமலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்து, குடிசையில் வசிக்கும் 320 குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுக்கும் வகையில், குடிமங்கலம் ஒன்றியம்புக்குளத்தில் 2.62 ஏக்கர் பரப்பளவில் 3 தளங்களுடன் கூடிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒரு வீட்டின் பரப்பளவு 401.24 சதுர அடியாகும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, பால்கனி, குளியல் அறை, குடிநீர் தொட்டி, கழிவுநீர் அகற்றும் வசதி, பூங்கா, கடைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, குப்பை தொட்டி, தெரு மின்விளக்கு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. விரைவில் பணி முடிந்து முதல்வர் திறந்து வைப்பார். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அப்போது குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரொனால்டு ஷெல்டன் பெர்னாண்டஸ், வட்டாட்சியர் தயானந்தன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் ராமசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: