கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் 1500 சான்றிதழ்கள் முடக்கம்

கெங்கவல்லி, ஆக.20:  கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கையெழுத்தின்றி 1500 சான்றிதழ்கள் முடங்கி உள்ளது. கெங்கவல்லி மற்றும் வீரகனூர் என இரு பிரிவாக பிரித்து, 34 வருவாய் கிராமங்கள் உள்ளன. கெங்கவல்லியை மையமாகக் கொண்டு தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சாதி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசு சான்று, சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், விதவை பெண்களுக்கான சான்றிதழ்களை பெறுவதற்காக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் தினந்தோறும் நூற்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி முதல், தாசில்தார் சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதை தொடர்ந்து சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தாராக பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக, கெங்கவல்லி தாசில்தாராக கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்பிறகு கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்த அனைத்து சான்றுகளும், இதுவரை கையெழுத்திடப்படாமல் 1500க்கு மேற்பட்டவை முடங்கி உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் வாரிசு சான்றிதழ், சிறு,குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கப்படாததால், பலர் வங்கிகளில் கடன் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் தேங்கி உள்ள சான்றிதழ்களை உடனடியாக வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: