பல்லாவரம் நகராட்சி 38, 39வது வார்டுகளில் 80 நாளாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காலி குடங்களுடன் திரியும் மக்கள்

தாம்பரம்: பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 38 மற்றும் 39 ஆகிய வார்டுகளில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம்  நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். மேலும், காலி குடங்களுடன் குடிநீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள்  கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  “பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம்.

இதில் குறிப்பாக 38, 39 ஆகிய வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் கடுமையாக உள்ளது. நகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் மூலம் சாதாரண தண்ணீரை எப்போதாவது அனுப்புகிறார்கள். ஆனால் அது வீட்டு தேவைக்கு பொதியதாக  இல்லாமலும், மற்ற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியுகிறதே தவிர சமையல் செய்வதற்கு, குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை. நகராட்சி சார்பில் வழங்கப்படும் பாலாறு குடிநீரும் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக வருவதில்லை.  இதனால் தனியாரிடம் அதிக விலைக்கு கேன் தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தண்ணீர் வழங்குவதாக கூறி வழங்கினார். ஆனால் அந்த குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால்  உடனடியாக நிறுத்திவிட்டனர். அதன் பின்னர் தண்ணீர் குறித்து பொதுமக்கள் கேள்விகேட்டால் கண்டுகொள்ளாமல் இருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலசங்கங்கள் சார்பில் குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம்  நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணியளவில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்.” என தெரிவித்தார்.

Related Stories: