செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகளின் கரைகள் பலமாக இருக்கிறதா, மதகுகளில் பழுது  ஏற்பட்டுள்ளதா, வரத்து கால்வாய்களில் தண்ணீர் செல்ல ஏதுவாக உள்ளதா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும்  உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரத்தை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில்  பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் தலைமை பொறியாளர் அசோகன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். கடந்த 2015ல் செம்பரம்பாக்கத்தில் இருந்து ஒரே நேரத்தில் 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர்  வெளியேற்றப்பட்டது. இதனால், ஏரிகளின் மதகுகள், தடுப்பு சுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ரூ.15 கோடி செலவில் செம்பரம்பாக்கம் ஏரியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், மதகுகள், தடுப்பு சுவர்கள்,  கரைப்பகுதிகளை தலைமை பொறியாளர் அசோகன் ஆய்வு செய்தார். அப்போது, ஏரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

Related Stories: