மாமல்லபுரம் பைபாஸ் சாலையில் எரியாத மின் விளக்குகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

மாமல்லபுரம், ஆக.20:  சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் வாகனங்கள் மாமல்லபுரம் செல்லாமல் எளிதில் செல்லும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் புதுச்சேரி செல்லும் வாகனங்களில் பயணிக்கும் மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர். அதேபோல், மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளும் இந்த சாலை சந்திப்பில் நின்று பஸ் மூலம் செல்கின்றனர். இதற்காக சாலையின் இரு புறமும் பஸ் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, போலீஸ் கண்காணிப்பு பூத் மற்றும் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன.

புறவழிச்சாலையில் இறங்கி மாமல்லபுரம் நகருக்கு செல்லும் பயணிகளை நம்பி ஆட்டோ நிறுத்தமும் இப்பகுதியில் இயங்குகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலையை பராமரிக்கும் டிஎன்ஆர்டிசி சார்பில், சாலையின் நடுவே மின் விளக்குகள்,  உயர் கோபுர மின்விளக்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அடிக்கடி இந்த மின் விளக்குகள் எரியாமல் செயலிழந்து விடுகின்றன. இதனால், இந்த புறவழிச்சாலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நிற்கின்றனர். சிறிது தூரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், அங்கு மது அருந்தும் சிலர், சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாசமாக சைகை காட்டுகின்றனர்.

இதனை கண்டித்து, மாமல்லபுரத்தில் செயல்படும் ஜனநாயக புரட்சி கழகம் சார்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த மின் விளக்குகள் சரி செய்யப்பட்டன. 6 மாதங்கள் ஆனபிறகு,  கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 கிமீ தூரத்துக்கு மின் விளக்குகள் மீண்டும் எரியாமல் கிடக்கின்றன.மாமல்லபுரத்தில் இருந்து அருகிலுள்ள ஓட்டல்கள், பெட்ரோல் பங்க், சிற்பக்கலை கூடங்கள் ஆகியவற்றில் வேலை செய்வோர், சைக்கிளில் செல்வது வழக்கம். சாலையில் உள்ள மின் விளக்குகள் எரியாததால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையை பராமரிக்கும் டிஎன்ஆர்டிசி நிர்வாகம் மாமல்லபுரம் புறவழிச் சாலையில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை பராமரித்து தொடர்ந்து எரிய செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

மின் கட்டணம் செலுத்தாமல் தவிர்க்கவே...

மின்விளக்குகளை பராமரிக்கும் டிஎன்ஆர்டிசி நிறுவனம், கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்க சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், முறையாக பராமரிப்பது இல்லை. தற்போது தயாரிக்கப்படும் எல்இடி விளக்குகள் சுமார் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பழுது ஏற்படாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, மின்விளக்கில் பழுது ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், மின் கட்டணம் அதிகமாக வருவதால் அதை செலுத்தாமல் தவிர்க்கவே இதுபோன்று இரவு நேரங்களில் மின்விளக்கை டிஎன்ஆர்டிசி நிர்வாகம் அணைத்து வைப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related Stories: