இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் தமிழக அரசு மீது திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

மதுராந்தகம், ஆக. 20: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்ட விழாவில், மதுராந்தகம் ஏரியை தூர்வாரவில்லை என திமுக எம்எல்ஏ புகார் கூறினார்.  மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த 12 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 3,700 பேருக்கு லேப்டாப்கள் வழங்கினார்.  அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், மதுராந்தகம் நகர திமுக செயலாளர் குமார், அதிமுக செயலாளர் ரவி, மதுராந்தகம் ஒன்றிய அதிமுக செயலாளர் அப்பாதுரை, பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், பங்கேற்ற திமுக எம்எல்ஏ புகழேந்தி   பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உடனே அதற்கென தனி அதிகாரியை நியமித்து பணியை வேகமாக தொடங்குகிறார்கள். மேலும், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், மதுராந்தகம் ஏரி தூர்வார வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், சட்டமன்றத்தில் பேசியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். அப்போது, முன்னாள் எம்பி மரகதம் குமரவேல் குறுக்கிட்டு, இது பள்ளி நிகழ்ச்சி, இங்கு அரசியல் பேச வேண்டாம் என்றார். அதற்கு திமுக எம்எல்ஏ, எனது தொகுதிக்கு தேவையான விஷயம் குறித்து அமைச்சரிடம் முறையிடுகிறேன்.  அது ஒன்றும் தவறில்லை என்றார். அப்போது, அதிமுகவினர் சிலர் கூச்சல் எழுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: