குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருத்தணி, ஆக. 20: குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன்  பெண்கள் சாலை மறியல் செய்தனர். திருத்தணி அடுத்த பட்டாபிராம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிநாதபுரம் கிராமத்தில்  100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. அப்பகுதி குளங்கள் நீரின்றி வறண்டதால்   குடிநீர் விநியோகம் பாதித்தது.  இதனால் அப்பகுதியினர் காலி குடங்களுடன் நீண்ட தூரத்தில் உள்ள நீர் நிலைகளை தேடி சென்றனர். கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.   இதையடுத்து அப்பகுதி மக்கள் சீராக குடிநீர் வழங்ககோரி ஊராட்சி நிர்வாகத்துக்கு பல முறை கோரிக்கை வைத்தும், குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.  ஐந்துக்கும் மேற்பட்ட முறை சாலை மறியலில் ஈடுபட்டும் எவ்வித பயனும் இல்லை.

 இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலி குடங்களுடன் திருத்தணி - நாகலாபுரம் சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடை பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் திருத்தணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் தங்கதுரை ஆகியோர் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தடையின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்ற அப்பகுதியினர், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: