குப்பை கழிவுகளால் மாசடைந்த பேபி கால்வாய்

திருவள்ளூர், ஆக. 20: பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் ‘’பேபி’’ கால்வாய் கரைகளில், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடுவதோடு மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த கால்வாயின் இருபுறமும் கரைகளின் மீது பொருத்தப்பட்ட சிமெண்ட் சிலாப்கள் அனைத்தும் பெயர்ந்துள்ள நிலையில், குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் மாசுபட்டு உள்ளது. மேலும், கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

குறிப்பாக ஈக்காடு பகுதியை சேர்ந்தவர்கள், அருகில் உள்ள பேபி கால்வாயில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுகின்றனர். பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இக்கால்வாய் வழியாக தண்ணீர் அனுப்புவது வழக்கம்.

இவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால், கொட்டப்படும் குப்பைகளாலும், சீமைக்கருவேல மரங்களாலும், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் மாசுபடும் அபாயமும் உள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே, பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பேபி கால்வாயில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்துவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கால்வாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: