ஆவடி கன்னடபாளையத்தில் சீரமைக்காத பயணிகள் நிழற்குடை

ஆவடி, ஆக. 20: ஆவடியை அடுத்த கன்னடபாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை 10ஆண்டுக்கு மேலாக உடைந்து கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.ஆவடி மாநகராட்சி, 3வது வார்டில் கன்னடபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 1000க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் சென்னை, புறநகர் பகுதிகளுக்கு  கன்னடபாளையம் பகுதி பஸ் நிறுத்தம் வந்து, அங்கிருந்து பேருந்தில் சென்றுவருகின்றனர். இங்கு பல ஆண்டுக்கு முன்பு பயணியர் நிழற்குடை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் அமைக்கப்பட்டது. இது பயணிகளுக்கு மழை, வெயில் காலத்தில் பாதுகாப்பாக இருந்தது.இதற்கிடையில், சில ஆண்டுக்கு முன்பு பெய்ந்த மழை, சூறாவளி காற்றால் பயணிகள் நிழற்குடையின் ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்து கிடக்கிறது.இதுகுறித்து அப்பகுதிக்கு பொதுமக்கள் கூறுகையில், கன்னடபாளையம்  பயணிகள் நிழற்குடையை கன்னடபாளையம், கொள்ளுமேடு, வெள்ளானூர் பகுதி மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்குடை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடைந்து கிடக்கிறது. இதனால், கோடைகாலத்தில் சுட்டு எரிக்கும் வெயிலால் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், மழைக்காலத்தில் உடைகள் நனைந்து பாழாகிறது. அங்குள்ள ஒரே ஒரு சிமென்ட் இருக்கையும் தரையை ஒட்டியுள்ளதால் பயணிகள் உட்கார முடியவில்லை. மேலும், அந்த இருக்கையும் சேதம் அடைந்துள்ளது.

இதனால் பஸ் வரும் வரை பயணிகள் கால் கடுக்க காத்திருக்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல், பள்ளி மாணவ - மாணவிகள் புத்தக பையுடன் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பஸ் நிறுத்த நிழற்குடையை சுற்றி இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகள் நிற்க முடியவில்லை. இதனால் பயணிகள் சாலையில் தான் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது.  இதோடு மட்டுமல்லாமல், நிழற்குடை அருகில் உள்ள உயர் கோபுர மின் கம்பத்தில் 10 விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகிறது. இதனால் அப்பகுதி  இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பயணிகள் உடைந்த நிழற்குடையால் தினமும் அவதிப் படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கன்னடபாளையம் நிழற்குடையை அகற்றி, புதிதாக நவீன வசதிகளுடன் நிழற்குடையை அமைக்கவும், மின் விளக்குகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: