50 கிடாய்களை வெட்டி ஆண்களுக்கு விருந்து

நத்தம், ஆக. 14: நத்தம் அருகே பாதசிறுகுடி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பொன்னர் சங்கர்கோயில். இதனருகே மகாமுனி, நல்லதங்காள், குட்டிகருப்பன் ஆகிய தெய்வங்கள் உள்ளன, இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா நடக்கும். இந்தாண்டு நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. இதையொட்டி அழகர்கோவில், வீரப்பூர் பொன்னர் சங்கர் கோயிலில் தீர்த்தம் எடுத்து வந்து பாதசிறுகுடியில் உள்ள கோயில் வீட்டில் வைத்தனர். பின்னர் சுவாமியை அழைத்து கொண்டு கிடாயுடன் பொன்னர் சங்கர் கோயிலுக்கு பக்தர்கள் சென்றனர். தொடர்ந்து நாக பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் அரண்மனை அல்லது கிராமத்து கிடாய் வெட்டியவுடன் 50க்கும் மேற்பட்ட நேர்த்திக்கடன் கிடாய்கள் வெட்டப்பட்டன. பின்னர் அந்த கிடாய்களை தோலை உரிக்காமல் பனை ஓலைகளையும், தென்னை மட்டைகளையும் கொண்டு தீ வைத்து வாட்டினர். பின் மஞ்சள் தடவி தண்ணீரில் சுத்தமாக கழுவி சிறு, சிறு துண்டுகளாக வெட்டி சமைத்தனர். தொடர்ந்து நள்ளிரவு சுவாமிக்கு படையல் வைக்கப்பட்டது. பின் உருண்டைகளாக சோறுகள் உருட்டப்பட்டு அங்குள்ள 3 இடங்களில் எரிசோறு எறியப்பட்டது. பின்னர் பொன்னர் சங்கருக்கு சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு பீடத்திற்கு மாலையணிவித்து பூஜைகள் செய்தனர். இதில் கலந்து கொண்ட சுற்றுவட்டாரம், வெளிமாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் மேற்பட்டோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

Related Stories: