தேவதானப்பட்டியில் தென்கொரிய தொழில்நுட்பத்தில் நெல் சாகுபடி 8 டன் வரை மகசூல் கிடைக்கும்

தேவதானப்பட்டி, ஆக.14: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் தென்கொரிய தொழில்நுட்பத்தில் நெல் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 டன் வரை மகசூல் கிடைக்கும் என கூறப்படுகிறது. தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(51). டாக்டர். இவர் கடந்த 50 வருடங்களுக்கு மேல் அமெரிக்காவில் மருத்துவப்பணியில் இருந்தார். தற்போது சொந்த ஊரான தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டிக்கு திரும்பியுள்ளார். இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தனது நிலத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்ய விரும்பினார். இதையடுத்து தனது நிலத்தில், தென்கொரிய வேளாண் விஞ்ஞானி சங் ஜீன் ஜோ என்பவர் மூலம் மல்ச்சிங் சீட் எனப்படும் மக்கும் நெகிழி தாள் மூலம் நெல் சாகுபடி செய்துள்ளார். மல்ச்சிங் சீட் மூலம் நிலம் முழுவதையும் மூட வேண்டும். பின்னர் அந்த மல்ச்சிங் சீட்டில் குறிப்பிட்ட இடைவெளிகளில் துளையிட்டு நெல் விதைகளை நடவு செய்கின்றனர். மல்ச்சிங் சீட்டின் அடியில் சொட்டுநீர் பாசன அமைப்பு மூலம் குறைந்த அளவு தண்ணீரில் பாசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நவீன நெல் சாகுபடியில், நிலத்தில் களைகள் முளைப்பதில்லை. சாதாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 5 டன் முதல் 6 டன் வரை மகசூல் கிடைக்கும். இந்த முறையில் சாகுபடி செய்தால் அதிகபட்சம் 8 டன் வரையிலும் மகசூல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த புதிய தொழில்நுட்ப முறை வெற்றியடைந்தால், இந்த முறையை அறிமுகப்படுத்தி மானிய விலையில் மூலப்பொருட்கள் வழங்கி, விவசாயிகளின் செலவினங்களை குறைத்து மகசூலை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: