இரவு நேரங்களில் பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள் ஆண்டிபட்டி பயணிகள் அவதி

ஆண்டிபட்டி, ஆக.14: ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிறுத்துவது இல்லை என்று பயணிகள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் கிழக்கு பகுதியின் நுழைவாயிலில், மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நகர் அமைந்துள்ளது. இந்நகரைச் சுற்றி 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் என நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேனி, கம்பம், திண்டுக்கல், மதுரை, பழநி, ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக நோயாளிகள் கம்பம் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் தலைமை மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். அவ்வாறு இரவு நேரங்களில் மதுரை, தேனி ஆகிய பகுதியிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் உரிய பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்துவது இல்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். பயணிகள் கூறுகையில், மதுரை, தேனி பகுதியிலிருந்து வரும் அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் மருத்துவ கல்லூரி மற்றும் க.விலக்கு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நிறுத்துவது இல்லை. இதனால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இரவு நேரங்களில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் உரிய பஸ் ஸ்டாப்பில் நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: