வாகனங்களில் பொருத்தியுள்ள அலங்கார விளக்குகளால் அடிக்கடி விபத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆண்டிபட்டி, ஆக.14: வாகனங்களில் பொருத்தப்படும் எல்இடி விளக்குகளாலும் அலங்கார விளக்குகளாலும் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் 60 முதல் 70 சதவீதம் வரை விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் அளவில் சாலை அமைத்துள்ளனர். ஆனால் தேனி-மதுரை செல்லும் வழியில் குன்னூர், க.விலக்கு, ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம் பிரிவு, உசிலம்பட்டி கணவாய் வரை உள்ள சாலையில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

இதற்கு சமீபகாலமாக டூவீலரில் ஆரம்பித்து ஆட்டோ உள்ளிட்ட கனரக வாகனங்களில் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் எல்இடி அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதே காரணம். இதனாலேயே சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த எல்இடி விளக்குகளை இரவு நேரங்களில் ஒளிர விட்டு வாகனங்களை வேகமாக ஓட்டி வருகின்றனர். இதனால் எதிரே டூவீலர் போன்ற சிறிய வாகனங்களில் வருபவர்களின் கண்கள் பாதிப்பு ஏற்பட்டு, அவ்வப்போது விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். மேலும் ஒரு சில நேரங்களில் உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் வாகனங்களின் உட்கட்டமைப்பில் நவீன அதிக வெளிச்சம் உள்ள முகப்பு விளக்குகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் பாதிப்பு ஏற்பட்டு விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சூழல் உள்ளது.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க அனைத்து வாகனங்களிலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தி உயிர் பலிகளை தடுத்திடவிட வேண்டும்’’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘இந்த வகை விளக்குகளை கொண்ட வாகனங்களால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகிறது. இது போன்ற பல வண்ணங்களில் விளக்குகள் பொருத்துவதை தடுக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டும் காணாமல் இருப்பதால் தனியார் வாகனங்களில் அலங்கார விளக்குகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: