மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் பார்கள் அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு

தேனி, ஆக.14: தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் இயங்கும் பார்களால் அரசுக்கு ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.தமிழக அரசு தமிழ்நாடு வாணிபக்கழகமான டாஸ்மாக் மூலமாக மதுபானங்களை கடந்த 2003ம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 823 மதுபானக்கடைகள் உள்ளன. இதல் சுமார் 29 ஆயிரத்து 700 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், மதுஊற்றிக்கொடுப்பவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இக்கடைகளை நிர்வகிக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் என ஐந்து மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் மதுபான விற்பனையகங்கள் செயல்பட்டு வருகிறது.மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட தேனி மாவட்டத்தில் ஆரம்பத்தில் 105 டாஸ்மாக் கடைகள் ெதாடங்கப்பட்டது. தற்போது மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற அரசின் உத்தரவாதத்தின்படி 91 கடைகளாக குறைந்துள்ளது. மது அருந்துவோருக்கு வசதியாக பார் நடத்தும் உரிமத்தை தனியாருக்கு டெண்டர் மூலம் அரசு வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் 91 மதுபானக்கடைகள் இருந்தாலும், 9 கடைகளுக்கு மட்டுமே பார் நடத்த முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பார்கள் உள்ளன. இத்தகைய பார்கள் ஆளும் கட்சியினரின் அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படுவதாக கூறப்படுகிறது. டெண்டர் மூலம் பார் உரிமம் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.பல லட்சம் போட்டி போட்டு எடுக்க வேண்டியுள்ளது. அதேசமயம், ஆளும் கட்சியின் அதிகாரத்தில் முறைகேடாக பார் நடத்துவோர் டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், போலீசார் என யார் யாருக்கு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்து நடத்தி வருவதாக மக்கள் கூறுகின்றனர். முறைப்படி டெண்டர் எடுத்தால் ஏற்படும் செலவுத் தொகையில் 30 சதவீதத்தை அரசுத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு பார் உரிமையாளர்கள் தருவதாக கூறப்படுகிறது. இதனால் பார் நடத்தும் உரிமையாளர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். அதேசமயம், அரசுக்கு கிடைக்கவேண்டிய ரூ.பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல் நடக்கும் மதுபானம் அருந்தும் பார்களை ஆய்வு செய்து, முறையற்ற பார்களை மூடவும், துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் அனுமதியின்றி பெரும்பாலான பார்கள் செயல்படுகின்றன. இங்கு சிற்றுண்டிகள், உணவுகள் தரமற்ற முறையில் விற்கப்படுகின்றன. அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டும் காணாமல் உள்ளனர். எனவே அதிகாரிகள் அனுமதியின்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: