வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையால் பாதுகாப்பு கருதி முகாம்களில் மக்கள் தங்க வைப்பு

ஊட்டி, ஆக. 14:  மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி துவங்கி மழை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து கடந்த வாரம் முழுக்க கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் 150க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோல், பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உணவு மற்றும் ஆடைகள் வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், மழை ஓய்ந்து 3 நாட்களுக்கு மேலாகியும் முகாம்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்படவில்லை. காரணம், சென்னை வானிலை மையம் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வெளியேற்றாமல் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.

ஒரு சிலர் மட்டும் தாங்களாகவே முன்வந்து முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர். தற்போது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன.  இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து தங்க வைத்துள்ளோம். மழை எச்சரிக்கை கைவிடப்பட்ட பின், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஒரு சிலர் சென்று விட்டனர்.  இருந்த போதிலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், என்றனர்.

Related Stories: