ஊட்டியில் நேற்று மீண்டும் மழை

ஊட்டி,  ஆக. 14: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை மீண்டும் மழை  பெய்ய துவங்கியுள்ளதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.  நீலகிரி  மாவட்டத்தில் கடந்த வாரம் 3ம் தேதி துவங்கிய மழை சுமார் 5 நாட்கள்  கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 500  ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. பல்வேறு இடங்களில் சாலைகள்  துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுமார் 4  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.

  இந்நிலையில்,  கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்தது. இதனால், பொதுமக்கள் சகஜ  வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள  பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிைல மையம் தெரிவித்துள்ளது.  இதனால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வீடுகளுக்கு அனுப்பாமல்  மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.  இந்நிலையில், நேற்று மாலை ஊட்டி  மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது இதனால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

Related Stories: