தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்சு சேவை

கோவை, ஆக. 14: தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்சு சேவை ஏற்படுத்தப்படும் எனவும், இதற்காக ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் உலக உடல் உறுப்புதான தினத்தை முன்னிட்டு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ.,) யங் இந்தியன்ஸ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தனர். இதில், தமிழ்நாடு உடல் உறுப்புதான திட்ட உறுப்பினர் செயலர் காந்திமதி, கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அரசு மருத்துவமனை டீன் அசோகன், சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் வரதராஜன், சுகாதார பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரமணி, ‘உறுப்பை பரிசளி’ திட்டத்தின் தலைவர் ராஜசபாபதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலை நகரங்களில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், மூளைச்சாவு அடைந்த 1,297 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதன் மூலம், 7,565 பேர் உறுப்புகள் பெற்று பயனடைந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிற மாநிலங்களிலும், பின்பற்ற வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என, அரசு செயல்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் கிடைக்கும். தொடர்ந்து நான்கு முறை உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ளோம். உடலுறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும். தமிழகத்தில் விரைவில், ஏர்-ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக, ஆஸ்திரேலியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.  மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு கைகளுக்கும் மாற்றுஅறுவைசிகிச்சை செய்து கொண்ட நாராயணசாமி என்ற ஏழை வாலிபருக்கு கோவை அரசு மருத்துவனையில் பணி வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் சார்பில் ராமகிருஷ்ணமூர்த்தி, ராஜன், பிரபாகரன், சீனவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: