குறைகளை அதிகாரிகள் கேட்கவில்லை முகாமில் பொதுமக்கள் போராட்டம்

ஊட்டி,  ஆக. 14:  ஊட்டி அருகே கன்னேரிமந்தனை அரசு பள்ளியில் உள்ள நிவாரண முகாமில்  தங்கியுள்ள பொதுமக்கள், கடந்த 7 நாட்களாக எந்த ஒரு அதிகாரியும் வந்து  குறைகளை கேட்கவில்லை என கூறி, நேற்று காலை முதல் சாப்பிடாமல் போராட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஊட்டி கன்னேரிமந்தனை அருகே  ஸ்ரீராம்நகர் உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கனமழை காரணமாக  பாதுகாப்பு கருதி ஸ்ரீராம் நகர் பகுதியில் வசிக்கும் 120க்கும்  மேற்பட்டோர் கடந்த 7ம் தேதி கன்னேரிமந்தனை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் 7 நாட்கள் ஆன நிலையில் உயர் அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ  வந்து தங்களது குறைகளை கேட்கவில்லை என கூறி, முகாமில் தங்கியுள்ள  பொதுமக்கள் நேற்று காலை, மதியம் உணவு சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான  சூழல் ஏற்பட்டது.

 இதுகுறித்து முகாமில் தங்கியுள்ள பொதுமக்கள்  கூறியதாவது: ஸ்ரீராம் நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து  வருகிறோம். மழை காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த 7ம் தேதி நிவாரண முகாமிற்கு  அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டோம். சரியான நேரத்திற்கு உணவு  வழங்கப்படுகிறது. ஆனால் நாங்கள் வசிக்க கூடிய ஸ்ரீராம் நகர் பகுதியில்  மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளின் சுவர்கள் இடிந்து  விழுந்துள்ளது. நீரோடையில் அதிகப்படியான நீர் வந்ததால் கிராமத்திற்கு செல்ல  கூடிய சிறு பாலமும் சேதமடைந்துள்ளது. அடிப்படை வசதி செய்து தராமல்  மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 7 நாட்களாக தங்கியுள்ள  நிலையில், இதுவரை உயர் அதிகாரிகளோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ வந்து எங்கள்  குறைகளை கேட்கவில்லை. இதுஎங்களை வருத்ததிற்கு உள்ளாக்கியுள்ளது, என்றனர். இதனிடையே மக்கள் உணவு சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த  வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் முகாமிற்கு சென்று அவர்களை  சமாதானப்படுத்தினர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: