வெண்டிபாளையம் கதவணையில் விரைவில் மின் உற்பத்தி

ஈரோடு, ஆக. 14: ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படும் என மின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு, நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் 2 யூனிட் மூலம் தலா 15 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும்.இதில், ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணை நவீனமானது. மற்ற தடுப்பணைகளில் 1,200 கன அடி தண்ணீர் வந்தாலே மின் உற்பத்தி துவங்கப்படும். ஆனால், வெண்டிபாளையம் தடுப்பணையில் 2,500 கன அடி நீருக்கு மேல் வந்தால்தான் தானியங்கி மூலம் மின் உற்பத்தி துவங்கும். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இந்த தண்ணீர் இன்று காலை அல்லது மதியத்திற்குள் ஈரோடு வந்தடையும்.

வெண்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று காலை 4வது மதகில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் பாசூர் தடுப்பணையை நோக்கி சீறிப்பாய்ந்தது.

இதுகுறித்து வெண்டிபாளையம் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேட்டூர் அணையில் இருந்து தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வருவதற்குள், அணையில் ஏற்கனவே தண்ணீர் முழு கொள்ளவை எட்டியது. இதனால் தண்ணீரின் வரத்தினை கருத்தில் கொண்டு நேற்று தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். மின் உற்பத்திக்கு போதிய தண்ணீர் வரத்து இன்னும் வரவில்லை. ஆனால், அணைக்கு 2,500 கனஅடி நீருக்கு மேல் தண்ணீர் வரத்தானால் மின் உற்பத்தி துவங்கி விடும். கதவணைகள் அனைத்தும் பராமரிப்பு பணிகள் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: