புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் நிரப்புவதில் அதிகாரிகள் மெத்தனம் கண்துடைப்பு நாடகம் என இளைஞர்கள் குற்றச்சாட்டு

திருமயம், ஆக.14: ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. நேர்முக தேர்வு முடிந்தும் உறுதியான தகவல் இல்லாததால் பல இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணிகளை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் படி மாவட்ட நிர்வாகம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி அரிமளம் ஒன்றியத்தில் கே.செட்டிபட்டி பஞ்சாயத்தில் ஒரு காலி பணியிடம், திருமயம் ஒன்றியத்தில் அரசம்பட்டி, குழிபிறை, லெம்பலகுடி, மேலூர், பி.அழகாபுரி, புலிவலம் உள்ளிட்ட மாவட்டத்தில் 42 ஊராட்சி செயலளார்கள் காலிப்பணியிடத்துக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அந்ததந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் அரசு வேலையில் சேரும் நோக்கில் தகுதியானவர்கள் ஆர்வமுடன் விண்ணபித்தனர்.இந்நிலையில் விண்ணபித்து பல மாதங்களுக்கு பிறகு ஊராட்சி செயலாளர் பணிக்காக விண்ணபித்தவர்களை நேர்முக தேர்வுக தேர்வுக்கு அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதனிடையே சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக கூறி மீமிசலை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்து பணி வழங்கும் ஆணைக்கு தடை வாங்கியதாக தெரிகிறது. இந்நிகழ்வு நடந்து ஒரு வருடம் ஆன நிலையில், இதனை எதிர்த்து வாதிட்டு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதில் மாவட்ட நிர்வாகம் அக்கரை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் எதற்காக மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை அரசு நிரப்புவதாக அறிவித்து எங்களை காக்க வைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதே கால்நடை உதவியாளர் பணிக்கு வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பும் பல தடங்களை சந்தித்து இது வரை எந்த முடிவும் எட்டப்படாமல் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்ற மக்களை ஏமாற்றும் வேளைகளை கைவிட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் வெளியிட்ட அனைத்து அரசு பணிகளையும் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி திருமயம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் கேட்டபோது:மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெற்ற அங்கன்வாடி காலி பணியிடங்களில் நிரப்புவதில் ஏற்பட்ட குளறுபடியால் இரவோடு இரவாக பணி ஆணை வழங்கப்பட்டது. இது பெரும்பாலான மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என ஒரு தரப்பினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். காரணம் பெரும்பாலானோர் இடைத்தரகர்களிடம் அங்கன்வாடி பணிக்காக லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் கோர்ட் பணி ஆணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு பின் பணி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட ரேசன்கடை விற்பனையாளர், உதவியாளர் ஆட்சேர்ப்பும் சான்றிதழ் சரிபார்ப்புடன் நிற்கிறது. அதேபோல் கால்நடை துறையில் வெளியிட்ட காலி பணியிட அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் காலி பணியிடங்களை அறிவிப்பதோடு சரி அதை நிரப்புவதற்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யவும், தேர்வு செய்தவர்களுக்கு பணி ஆணை வழங்குவதிலும் இருந்து பின் வாங்குகிறது. இதற்கு காரணம் என்ன என்று அரசியல்வாதிகளுக்கும், மாவட்டத்தை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தான் தெரியும். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிரப்ப உள்ள பணிகளுக்கு நடைபெறும் நேர்முக தேர்வு ஒரு கண் துடைப்பு போலதான் தெரிகிறது. இது போன்ற நேர்முக தேர்வால் மாவட்ட வேலை அலுவலத்தில் அரசு பணிக்காக பதிவு செய்து பல ஆண்டுகாளாக காத்திருப்பவர்கள் ஏமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு நேர்முக தேர்வு அடிப்படையில் பணி நிரப்புவதை தவிர்த்து மாவட்;ட வேலை வாய்ப்பு அலுவலம் மூலம் பணி ஆணை வழங்க வேண்டும் என்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வேலை வாய்ப்புகளை கிடப்பில் போடாமல் தகுதியானவர்களை உடனே நிரப்ப நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: