உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, கற்றல் திறன், தரப்படும் உணவை ஆய்வு செய்ய வேண்டும் சிஇஓ அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக.14: மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று புதுகை சிஇஓ அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், தற்போதைய நிலையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியப் பயிற்றுனர்கள், வட்டார அளவில் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் குறைகள் இருப்பின் அவற்றை களைந்து மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.தற்போது ஒவ்வொரு குறுவளமையமும், குறுவளமையத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள ஏதாவது ஒரு நடுநிலைப்பள்ளியினை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், தனித் திட்டமாக செயல்பட்ட வரை இந்த குறுவளமையம் நடுநிலைப்பள்ளி அளவிலேயே செயல்பட வேண்டிய கட்டாயமும் இருந்தது. தற்போது அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 2018 முதல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் அரசு மேல்நிலைப்பள்ளியினை தலைமை இடமாக கொண்டு குறுவள மையங்கள் செயல்படும். இதனால் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியினை குறுவளமைய தலைமையிட பள்ளியாக தேர்வு செய்ய வேண்டும். அந்த மேல்நிலைப்பள்ளியினைச் சுற்றி மேற்கூறியவாறு கூம்பு அமைப்பில் அமைந்து உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்ற வரிசையில் சுமார் 10 முதல் 15 எண்ணிக்கை வரையிலான அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கிய பகுதி குறுவளமையப் பகுதியாக கருதப்பட வேண்டும்.

இடத்திற்கு தக்கவாறு பள்ளிகளின் எண்ணிக்கையை கூட்டியோ குறைத்தோ நிர்ணயித்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றி அமைக்கப்படுகின்ற குறுவளமைய பகுதிக்கு பொறுப்பானவராக நியமிக்கப்படுகின்ற ஆசிரியர் பயிற்றுனர், அந்தக் குறுவளமைய பகுதியின் தலைமையிடமாக கொண்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும். மேலும் அவர் வழங்கும் பிற பணிகளையும் அந்த ஆசிரியர் பயிற்றுநர் செயல்படுத்திட வேண்டும். சம்பந்தப்பட்ட தலைமை இடத்து மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிகளை உன்னிப்பாக சீராய்வு செய்ய வேண்டும். உண்டு உறைவிட பள்ளிகளை ஆய்வு செய்யும்போது மாணவர்களின் பாதுகாப்பு, கற்றல் திறன், வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி திட்ட அலுவலர், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: