மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி அரசு பள்ளியை நூலகமாக மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்திய பெற்றோர் மாணவர்களை மீண்டும் சேர்த்தனர்

அறந்தாங்கி,ஆக.14: அறந்தாங்கி அருகே மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், நூலகமாக மாற்றப்பட்ட அரசு பள்ளியில் மாணவர்களை மீண்டும் சேர்த்து பள்ளியை கிராம மக்கள் மீட்டெடுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குளத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1950ம் ஆண்டு தனியாருக்கு சொந்தமான கூரை வேய்ந்த கொட்டகையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 1968ம் ஆண்டு அப்போதைய அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தலைவர் அறந்தாங்கி ராஜன் முயற்சியால், குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஓட்டு கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி திறக்கப்பட்டது.இந்த பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் படித்து வந்த நிலையில், தனியார் பள்ளி வாகனங்கள் குளத்தூருக்கு சென்று மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து சென்றதால், குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இந்த ஆண்டு பள்ளியில் மொத்தம் 6 மாணவ, மாணவியரே படித்து வந்தனர்.இதனால் பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வந்தார். மாணவ, மாணவியர் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, 6 மாணவ, மாணவியரையும் பெற்றோர் வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்தனர். பள்ளியில் இறுதியாக 5ம் வகுப்பு படிக்கும் கணபதிராஜா என்ற மாணவன் மட்டுமே படித்து வந்தார். தமிழகத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றப்போவதாக அரசு அறிவித்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் பள்ளியும், ஆவுடையார்கோவில் வட்டத்தில் சின்னபட்டமங்களம் பள்ளியும் கடந்த 10ம் தேதி முதல் நூலகமாக மாற்றப்படும் என அறிவித்தது. குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நூலகமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் ஊர் பள்ளியை மூட அனுமதிக்கமாட்டோம் என்று கூறி, பள்ளியை தொடர்ந்து இயங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் ஊரில் இருந்து தனியார் பள்ளி மற்றும் வெளியூர் பள்ளிகளுக்கு சென்று படிக்கும் மாணவ,மாணவியரை குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்தனர்.அதன்படி குளத்தூர் கிராம மக்கள் 10 மாணவ,மாணவியரை பள்ளிக்கு அழைத்து வந்து, பள்ளியை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளியின் முன்பு காத்திருந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரின் உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் 10 மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்க்க சம்மதித்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளியில் சேர வந்த மாணவ, மாணவியரிடம் கல்வி அதிகாரிகள் அவர்களது பெயர் உள்ளிட்ட விபரங்களை கேட்டு, பள்ளியில் சேர்த்தனர். பின்னர் அவர்களை கல்வி அதிகாரிகள் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். அறந்தாங்கி அருகே மாணவர் சேர்க்கையை காரணம் காட்டிய, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நூலகமாக மாற்றும் முயற்சியை பள்ளியில் மாணவர்களை சேர்த்து முறியடித்து, பள்ளியை மீட்டெடுத்த பெற்றோரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.அதிக மாணவர்களை சேர்க்க நடவடிக்கைஇதுகுறித்து குளத்தூரைச் சேர்ந்த துரைராஜ் கூறியது:குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மீட்டிங் செல்லும்போது, மாணவர்கள் தனியாக இருப்பதால் பலரும் தங்கள் குழந்தைகளை வெளியூர்களில் சேர்த்தனர். இதனால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், அரசு பள்ளியை நூலகமாக மாற்ற உள்ளதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் நாங்கள் ஒன்றுகூடி எங்கள் ஊர் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து பள்ளியை மூடாமல் பார்த்து கொண்டோம். தொடர்ந்து பள்ளியில் அதிகப்படியான மாணவர்கள் சேர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

பள்ளி தொடர்ந்து நடத்தப்படும்அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் கூறியது:குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி ஒரு மாணவன் மட்டுமே படித்து வந்தார். அதனால் அந்த மாணவரை வேறு பள்ளிக்கு மாற்றுவிட்டு, அரசின் கொள்கை முடிவின்படி பள்ளியை நூலகமாக மாற்ற அரசு உத்தரவிட்டது. அறிந்த பொதுமக்கள் வெளியூரில் படிக்கும் தங்கள் குழந்தைகள் தற்போது பள்ளியில் சேர்க்க அழைத்து வந்துள்ளனர். பள்ளியில் மாணவர்கள் சேர்வதால், தமிழக அரசு இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த உள்ளது. எனவே பொதுமக்கள் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் ஆர்வம் மற்றும் முயற்சியால் மூடப்பட்ட பள்ளியை திறந்து செயல்பட வைப்பதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: