சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபாதை வியாபாரிகள் பேரணி

புதுச்சேரி,  ஆக. 14:  சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபாதை வியாபாரிகள்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்து மனு கொடுத்தனர்.  புதுவையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் கடந்த ஏப்ரல்  23ம்தேதி முதல் அதிரடியாக அகற்றி வருகிறது. தற்போது 3வது கட்டமாக  ஆக்கிரமிப்புகளை மீண்டும் மீண்டும் முக்கிய சாலைகளில் அகற்றும் பணியில்  பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால்  பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். சில நாட்களுக்கு முன் மரப்பாலம் அருகே அதிகாரிகளிடம்  வாக்குவாதம் செய்த நிலையில், சப்-கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டது.

இந்நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை  காப்பாற்ற வலியுறுத்தியும், இதற்கான வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014ஐ    அமல்படுத்தக்கோரியும் சாலையோர வியாபாரிகள் 13ம்தேதி பேரணியாக மாவட்ட  கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதன்படி இந்திராகாந்தி சிலை அருகே நேற்று  திரண்ட புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் சிஐடியு பிரபுராஜ்  தலைமையில் திரண்டனர். அவர்களது பேரணிக்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்த  நிலையில் மறியல் செய்ய வியாபாரிகள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போக்குவரத்து நெரிசல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு  உயர்அதிகாரிகள் அனுமதி கொடுத்ததையடுத்து அங்கிருந்து நடைபாதை வியாபாரிகள்  200க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு 100 அடி ரோடு வழியாக  ராஜீவ்காந்தி சதுக்கத்தை அடைந்து, வழுதாவூர் ரோட்டில் உள்ள  மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். பேரணிக்கு தலைவர் மூர்த்தி,  அழகர்ராஜ், வடிவேலு, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அவர்களை  நுழைவு வாயில் அருகே ரெட்டியார்பாளையம் மற்றும் கோரிமேடு போலீசார் தடுத்து  நிறுத்தினர். அங்கு சிஐடியு தலைவர் முருகன், செயலாளர் சீனுவாசன், துணைத்  தலைவர் மதிவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அதைத் தொடர்ந்து முக்கிய  நிர்வாகிகள் 10 பேர் மட்டும் மாவட்ட கலெக்டர் அருணை சந்தித்து கோரிக்கை  மனுவை அளித்தனர்.

அதில், வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பை முழுமையாக  நடத்தாமலும், அடையாள அட்டை வழங்காமலும் அவசரம், அவசரமாக பொதுப்பணித்துறை  அதிகாரிகள் கடைகளை ஆக்கிரமிப்பாளர்கள் போர்வையில் அகற்றுவதை சங்கம்  நிராகரிக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த பணியை முறைபடுத்த வியாபரிகள்  ஒத்துழைப்பு தருவார்கள். ஆனால் அவர்களை முற்றிலுமாக அகற்றக் கூடாது. ஒருசில  சமூக விரோதிகள் மாமூல் வசூல் செய்யும் நடவடிக்கைகளை காலவ்துறையும், அரசும்  நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்  கொண்ட மாவட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: