ஆலங்குளம் மலைப்பகுதியில் மான்கள், மயில்கள் உயிரிழப்பு அதிகரிப்பு

ஆலங்குளம், ஆக. 14:  ஆலங்குளம் நகரிலிருந்து சுமார் இரு கிலோமீட்டர் தொலைவில் ஒக்கநின்றான் பொத்தை மலை அமைந்துள்ளது. ராமர் கோயில் மலை என்றழைக்கப்படும் இதனைச்சுற்றி அத்தியூத்து, கழுநீர்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, மாயமான்குறிச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், இந்த மலையடிவாரத்தில் உள்ளது. இந்த மலைப்பகுதி வனத்துறையினரால் பாதுகாக்கப்படும் வனப்பகுதியாகும். இங்கு மான், மிளா, நரி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளும், தேசிய பறவையான மயிலும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இதில் பகல் நேரங்களில் மயில்களும், இரவில் மான்களும் இரை தேடியும், தண்ணீர் தேடியும் மலையடிவார பகுதியில் உள்ள வயல்களுக்குள் இறங்குவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், வனத்துறையிடம் புகார் அளிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை மலையில் இருந்து விலங்குகள், ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில நேரங்களில் மான்கள், நெல்லை - தென்காசி சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி பலியாகின்றன. கடந்த 2 மாதத்தில் மட்டும் 6க்கும் மேற்பட்ட மான்கள், இச்சாலையோரம் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வனத்துறை அலட்சியத்தால், இப்பகுதியில் மயில்களின் இறப்பும் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் மலையடிவார சாலையோரத்தில் பெண் மயில், மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு மக்கள் தகவல் அளித்தனர். ஆனால் வனத்துறை தரப்பில், போதிய ஆட்கள் இல்லாததால் பொதுமக்களையே அந்த மயிலை குழி தொண்டி புதைக்க கூறியுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ராமர் கோயில் மலையடிவாரத்தில் மான்கள், மயில்கள் இறப்பது குறித்து வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. மான்கள் நீர் அருந்துவதற்காக ஆலங்குளம் மலையடிவாரத்தில் போர் போடப்பட்டு தண்ணீர் தொட்டியும் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இங்கு இதுவரை மோட்டார் பொருத்தப்படாமலும், தண்ணீர் தொட்டி பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. எனவே தற்காலிகமாக குடிநீருக்காக தொட்டிகளைப் பராமரித்து அருகே உள்ள கிணற்றில் இருந்து நீர் நிரப்பினால், மான்கள் ஊருக்குள் வந்து உயிரிழப்பதை தவிர்க்கலாம். மேலும் வனப்பகுதியில் வேலி அமைத்து விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Related Stories: