10 கிராமங்கள் பயன்பெறும் கல்லணைபூம்புகார் சாலையில் சிறிய தூறலுக்கே குளம்போல் தேங்கும் மழைநீர்

மயிலாடுதுறை, ஆக.14: மயிலாடுதுறையில், கல்லணைபூம்புகார் சாலையில் சிறிய தூறல் மழைக்கே தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கால்டெக்ஸ் பெட்ரோல் பங்கை ஒட்டி கல்லணைபூம்புகார் சாலை அமைந்துள்ளது, மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் கால்டெக்ஸ் பெட்ரோல் பங்கையொட்டி கிழக்கே திரும்பி பூம்புகாரை நோக்கி செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியானின் வடபுற சாலையைவிட தென்புற சாலை பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் சிறிய தூரல் தூரினாலே மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தண்ணீர் சேர்வதுபோல் பல்வேறு இடங்களிலிருந்து தண்ணீர் ஓடிவந்து அந்த சாலையின் பள்ளத்தில் தேங்கி விடுகிறது. சுமார் 50 மீ தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகளாலும், வாகனங்களாலும் செல்வது சிரமமாக உள்ளது. மேலும் பல்வேறு இடங்களிலிருந்து அடித்துவரும் சாக்கடை மற்றும் குப்பைக்கழிவுகள் அங்கே தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாவதும் வாடிக்கையான ஒன்றாகும். தூய்மை இந்தியா என்று நகராட்சி படாதபாடு பட்டாலும் நெடுஞ்சாலைத்துறையினரால் இந்த பள்ளம் ஒரு பிரச்னையாகவே உள்ளது.

ஒருமுறை தண்ணீர் தேங்கினால் அந்த நீர் வெயிலாலும் சாலையில் செல்லும் வாகனங்களால் சிதறி காய்ந்தால் மட்டுமே தண்ணீர் வற்றும் இல்லை என்றால் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வடியாமலேயே இருக்கும்.இப்பகுதியில் வள்ளலார் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள், அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு செல்வோர் மேலும் அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்வோர் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். உடனே மழைகாலம் வருதவற்குள் இப்பகுதியிலிருந்து 100 மீ தூரத்தில் அலுவலகம் அமைத்துள்ள மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதி பக்கம் சற்று சென்று பார்வையிட்டு அந்த இடத்தை ஆய்வு செய்து சாலையின் ஒருபகுதி பள்ளமாக உள்ளதை சரிசெய்யவும், அப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வள்ளலார் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: