அனைவரும் பங்கேற்க கலெக்டர் அழைப்பு தாணிக்கோட்டகத்தில் வானங்கோட்டகம் ஏரி தூர்வாரும் பணி தீவிரம்

வேதாரண்யம், ஆக.14: வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் பகுதியில் மழைநீரை சேமிக்கும் வகையிலும் ஆற்று நீர் கடலில் கலப்பதை தடுக்கும் விதத்திலும் 192 ஏக்கர் பரப்பளவில் உள்ள வானங்கோட்டகம் ஏரி தூர்வாரும் பணி ரூ.4 கோடி செலவில் நடைபெறுகிறது.வேதாரண்யம் தாலுகா மழையை நம்பி நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிக அளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் பருவ மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒருமாதம் கடந்து திருத்துறைப்பூண்டி பகுதி வழியாக வேதாரண்யம் ஒன்றிய எல்லையான தாணிக்கோட்டகம் பகுதியில் முள்ளியாற்றிற்கு வந்து சேருகிறது.இதனிடையே பருவ மழை பெய்ய தொடங்கினால் முள்ளியாற்றிலிருந்து வரும் காவிரி நீருடன் மழை நீரும் சேர்ந்து வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டு வாய்மேடு பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரம் உள்ள ஆதனூர் ஊராட்சி வரை வரும் மானாங்கொண்டான் வடிகால் ஆற்றில் கலந்து, பின்னர் ஆதனூர் சட்ரஸ் பாலம் வழியாக வௌ்ள நீர் கடலில் கலக்கும்.இந்நிலையில் மழை நீரை சேமிக்கும் வகையிலும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டு மானங்கொண்டான் ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியின் சேக்குட்டி தேவன்காடு பகுதியில் தொடங்கி நடுத்திட்டு வழியாக நைனான்குளம் வரை உள்ள 6 கி.மீ சுற்றளவு கொண்ட 192 ஏக்கர் வானங்கோட்டகம் ஏரியை ரூ.4 கோடி செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது.

ஏரி பகுதியிலிருந்து நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட இயந்திரங்களை கொண்டு 4 அடி வரை தூர்வாரும் பணி நடந்து வரும் நிலையில், அதிலிருந்து அள்ளப்படும் மணம் ஏரி பகுதியின் நான்கு கரைகளையும் பலப்படுத்தும் வகையில் கொட்டப்பட்டு கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏரி வெட்டப்படும் இடத்தில் உள்ள வண்டல் மண்ணை தங்கள் வயலுக்கும், தென்னந்தோப்புகளுக்கும் உரத்திற்காக எடுத்து செல்கின்றனர். இந்த ஏரி தூர்வாரப்பட்டு தண்ணீர் தேங்கி வைத்தால் அதை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் விவசாயம் செய்வதற்கும் பயன்படும். தற்போது இந்த தூர்வாரும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தூர்வாரி முடித்து தண்ணீர் தேக்கி அதில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக படகு சவாரி விடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: