பாவாலி ஊராட்சியில் 2 நாட்களாக குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

விருதுநகர், ஆக. 11: விருதுநகர் அருகே, பாவாலி ஊராட்சியில் குழாய் உடைப்பால், 2 தினமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே, பாவாலி ஊராட்சியில் கலைஞர் நகர், அய்யனார் நகர், பராசக்தி நகர், சந்திரகிரிபுரம், யானைக்குழாய் தெருக்கள் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில், கவுசிகா ஆற்றை ஒட்டிய அய்யனார் பகுதி பொதுமக்களுக்கு, பாவாலியில் உள்ள கிணற்றில் இருந்து, பைப் லைனில் தண்ணீர் கொண்டு வந்து, மேல்நிலைத்தொட்டியில் ஏற்றி விநியோகம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.  

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மேல்நிலைத்தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இது தொடர்பாக ஊராட்சி பொதுமக்கள் டேங்க் ஆபரேட்டரிடம் தகவல் தெரிவித்தும், குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை இல்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சீரமைத்து, வீணாகும் குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாரீஸ்வரி என்பவர் கூறுகையில், ‘ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்படும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. உடைப்பை சீரமைக்க ஊராட்சி பணியாளர்களிடம் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. வறட்சி நேரத்தில் குடிநீர் வீணாவது வேதனை அளிக்கிறது. ஜமீலா பீவீ: குடிநீர் கிடைக்காமல் விலை கொடுத்து வாங்கி வரும் நிலையில், இரு தினங்களால் டேங்கில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. வீணாகும் குடிநீரை எடுத்து பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது’ என்றார்.

Related Stories: