மழையால் பாதித்த மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் இன்று ஊட்டி வருகை

ஊட்டி, ஆக.11:  நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை சேதங்களை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராணம் வழங்கிடவும் இன்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஊட்டி வருகிறார்.

 நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி துவங்கி மழை படிப்படியாக அதிகரித்து கன மழையாக மாறியது. மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் அதிகம் பாதித்துள்ளன. பல கிராமங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களை சந்திக்க இன்று (11ம் தேதி) திமுக., தலைவர் ஸ்டாலின் ஊட்டி வருகிறார். கோவைக்கு விமானம் மூலம் வரும் அவர், பின் காரில் ஊட்டி வருகிறார். தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். மேலும், திமுக., சார்பில் நிவாரண பொருட்களையும் வழங்கவுள்ளார். நீலகிரி மாவட்ட திமுக., செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். இதன்படி இன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பகல் 12 மணிக்கு மேட்டுப்பாளையம் குன்னூர் வழியாக ஊட்டி வருகிறார். பிற்பல் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து கூடலூர் செல்கிறார்.

2.30 மணிக்கு நடுவட்டம் இந்திரா நகரில் மண்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பிற்பகல் 3 மணிக்கு கூடலூர் தாலுகா பகுதிகளில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கிறார்.

 தொடர்ந்து மாலை 4 மணிக்கு பந்தலூர் தாலுக்கா பகுதிகளில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு எலியாஸ் கடை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். மாலை 5.30 மணிக்கு சேரம்பாடி செக்போஸ்ட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிடுகிறார். மாலை 5.45 மணிக்கு சேரம்பாடி பஜார் முகாமில் உள்ள மழையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்.  மாலை 6 மணிக்கு அய்யன்கொள்ளி முகாமில் உள்ள மழையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார். பிதர்காடு, நெலாக்கோட்டை, தேவர்சோலை, கூடலூர், நடுவட்டம் வழியாக இரவு 8 மணிக்கு ஊட்டி வருகிறார். 12ம் தேதி தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஊட்டியில் இருந்து குருத்துக்குளி கிராமத்திற்கு செல்கிறார். காலை 11.30க்கு குருத்துக்குளி கிரமத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். காலை 12 மணிக்கு எம்.பாலாடா வழியாக கப்பத்தொரையாடா மற்றும் கல்லக்கொரை ஆடாவிற்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கிறார். தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார்.  பகல் 12.30 மணிக்கு எமரால்டு முகாமில் மழையால் பாதிக்கப்பட்டு தங்கியுள்ள மக்களை சந்திக்கிறார். இந்த ஆய்வின் போது, முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரியுமான எம்பி., ராசா, கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி, ஊட்டி எம்எல்ஏ., கணேசன் உட்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர். இவ்வாறு முபராக் கூறியுள்ளார்.

Related Stories: