அட்டபாடியில் கனமழை உணவு இன்றி மக்கள் தவிப்பு

பாலக்காடு, ஆக.11:  கேரள  மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களில் கனமழை காரணமாக 3 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் மலைவாழ் மக்கள் உணவு இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வண்ணாம்தாரை, காரையூர், கூடம்சாளா பகுதியில் வசிக்கும் சுமார் 500 பேர் கிராமங்களை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. சம்பவ இடம் சென்ற வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் இப்பகுதி மக்களை மீட்டனர். அட்டப்பாடி மலைப்பகுதி மக்களை நேற்று  கேரள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைசசர்  ஏ.கே.பாலன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்தனர்.   அமைச்சர் கிருஷ்ணன்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது: பாலக்காடு  மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 82 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரம் பேர்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, உடை,  குடிநீர், மருத்துவ வசதிகள் செய்வதற்காக ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories: