பந்தலூர் விவசாய நிலங்களில் வெள்ளம்

பந்தலூர், ஆக.11: பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றுப்பகுதி, உப்பட்டி புஞ்சைவயல் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் வாழை, பாக்கு, தேயிலை தோட்டங்கள் மழை நீரில் மூழ்கியதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

 நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடந்து  கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  தொடர் மழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து சேதமானது. பந்தலூர் வட்டத்தில் 15க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  நெல்லியாளம் டேன்டீ  பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதிய வசதிகள் செய்து தராததால் மக்கள் சிரமப்பட்டனர். அனைத்து முகாம்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு தன்னார்வ இளைஞர்கள், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் உணவு உள்ளிட்ட  பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். மேலும், அனைத்து துறை அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பந்தலூர் அருகே இரும்பு பாலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, ஆறுமுகம் என்பவர் வீடு இடிந்து சேதமானது. இதேபோன்று தேவாலா அட்டி செல்லபாக்கியம் என்பவர் வீட்டின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமானது. சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் மரப்பாலம் காற்றாட்டு வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர்.  பொன்னானி ஆற்றுப்பகுதி மற்றும் உப்பட்டி புஞ்சைவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை, பாக்கு, தேயிலை தோட்டங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மக்கள் தவித்தனர். நேற்று பந்தலூர் பகுதியில் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories: