மத்திய பல்கலைக்கழகம் ஓரவஞ்சனை புதுவைக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கொடுக்காமல் அலைக்கழிப்பு

புதுச்சேரி, ஆக. 11:  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் புதுவை மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்னையில் புதுவை அரசும், எம்பிக்களும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 1985ம் ஆண்டில் துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தங்களது விவசாய நிலங்களை வழங்கினர். இதனால் புதுவை மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாடப்பிரிவுகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு புதுவை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அப்போதுள்ள பாடப்பிரிவுகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர், படிப்படியாக பல்வேறு பாடப்பிரிவுகள் புதிதாக கொண்டுவரப்பட்டது. தற்போது 66க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே புதுச்சேரி  மாணவர்களுக்கு 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பாடப்பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, வேலைவாய்ப்பு அளிக்கும் மிக முக்கியமான பாடப்பிரிவுகளாக எம்பிஏ, எம்டெக் போன்ற படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில்லை. இப்பிரச்னை தொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.

 புதுவை மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகக்குழு கூட்டத்திலேயே முடிவு செய்து அறிவிக்கலாம். ஆனால், மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறி புறக்கணித்து வருகிறது. மாநில அரசு தேர்தல் வாக்குறுதியில் 25 சதவீத இடஒதுக்கீடு இடம் பெற்றுள்ளது. அதனை பெற்று தர அரசும் முயற்சி எடுக்கவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் இயங்கி வரும் ஜிப்மரில் 27 சதவீத இடஒதுக்கீடு புதுவை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், கலை அறிவியல் படிப்பு பிரிவுகளை கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், 25 சதவீத இடஒதுக்கீட்டை புதுவை மாணவர்களுக்கு வழங்காமல் ஓரவஞ்சனை செய்து வருகிறது. அதே நேரத்தில் இலவச பேருந்து முறை ரத்து செய்து, செமஸ்டருக்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்தது. மேலும், அனைத்து பாடபிரிவுகளுக்கான கல்வி கட்டணத்தையும் 83 சதவீதம் உயர்த்தியது. இதுதொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பல்கலைக் கழகம் துவங்கி முதல் 10 ஆண்டுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு எதுவும் அளிக்கப்படவில்லை. காலப்போக்கில் புதுச்சேரி மாணவர்களுக்கென்று தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அன்றிலிருந்து இந்த இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. அப்போது 8 படிப்புகளுக்கு வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு படிப்படியாக 18 படிப்புகளுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகம் 2008-2012 ஆண்டுகளில் நிறைய படிப்புகளை தொடங்கியது. ஆனால், அவற்றில் இடஒதுக்கீடு அளிக்கத் தவறிவிட்டது.  இதையடுத்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் அனைத்து படிப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று பரிந்துரைத்தது. இதுதொடர்பான கோப்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அமைச்சகத்திடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை என்றனர். இதற்கிடையே மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகி 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  அதனை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

 தற்போது பொறியியல் பாடப்பிரிவு மீதான மோகம் குறைந்துவிட்டது. இதனால் கலை, அறிவியல் பாடப்பிரிவில் சேரவே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் இளநிலை கலை, அறிவியல் படித்துவிட்டு, புதுவையிலிருந்து 6 ஆயிரம் பேர் வெளி வருகின்றனர். அந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்றால், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் மற்றும் காரைக்கால் கலைஞர் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மற்ற மாநிலங்களை போல் புதுவையில் மாநில பல்கலைக்கழகம் கிடையாது. இதனால் ஏராளமான மாணவர்களின் உயர்கல்வி கனவு எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனவே, புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: