விருத்தாசலம் அருகே இருளக்குறிச்சியில் தரமின்றி போடப்பட்ட தார்சாலை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

விருத்தாசலம், ஆக. 11: விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருளக்குறிச்சி ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் சாலை கடந்த சில வருடங்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணியின் இறுதி கட்டமாக நேற்று தார் கலந்த ஜல்லி போடும் பணி நடைபெற்றது.

அப்போது சாலையின் அகலம் மற்றும் தடிமன் மிக குறைத்து, போதுமான அளவு தார் கலக்காமல் தரமின்றி சாலை பணி நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட துணைத் தலைவர் பாண்டியன் தலைமையில் சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையை தரமாக அமைக்க வேண்டும் எனக்கூறி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கம்மாபுரம் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் முருகவேல் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஆலடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முறையாக தரமான சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: