காரைக்காலில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தீவிரம்

காரைக்கால், ஆக.11: எழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணியை, காரைக்காலில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தொடங்கி வைத்தார்.மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 7-வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணியை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இப்பணியில் சுமார் 3 லட்சம் பொது சேவை மையங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த பணியானது முதல் முறையாக செல்பேசி செயலி வழியாக மேற்கொள்ளப்படவுள்ளது. காரைக்கால் மாவட்டத்துக்கான பணியை மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொது சேவைகள் மைய அமைப்பின் முதுநிலை கணக்கீட்டாளர் பாஸ்கர், மாநிலத் திட்ட மேலாளர் பிரபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் வீடுகள், வணிக நிறுவனங்களில் செல்பேசி செயலி மூலம் தகவல் பதிவு செய்யும் விதம் குறித்து கலெக்டருக்கு விளக்கினர்.7வது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணியின் செயல்பாடுகள் குறித்து பொது சேவை மைய நிர்வாகத்தினர் கூறியது: 7வது பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு இணையவழி தேர்வு மூலம் கணக்கீட்டாளர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த களப்பணியானது வீடுகள் மட்டுமன்றி வணிக நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. கணக்கீட்டாளர்கள் தங்கள் அடையாள அட்டை, மத்திய அரசின் மூலம் பொது சேவைகள் மையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகார கடிதம் எடுத்துச் செல்வர். புதுச்சேரி பிராந்தியத்தில் கடந்த 2ம் தேதி இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த 1976ம் ஆண்டு முதல் இதுவரை 6 பொருளாதாரக் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. காரைக்காலில் 2013ல் நடைபெற்ற பொருளாதாரக் கணக்கெடுப்பில் வேளாண் சார்ந்த நிறுவனங்கள் 1,095-ம், வேளாண்மை சாராத நிறுவனங்கள் 9,506ம் பதிவாகியுள்ளன.

இந்த பொருளாதார கணக்கெடுப்பு என்பது, வளரும் நாடுகள் பின்பற்றும் புள்ளியியல் பிரிவின் பரிந்துரைப்படி, ஒரு தேசிய அளவிலான வணிகக் கையேடு உருவாக்கப்படும். வேளாண்மை சாராத விரிவான தகவல், இந்திய அளவிலும், மாநிலம், மாவட்டம், கிராமம், நகராட்சி, வார்டு வாரியாக பொருளாதார செயல்பாடு குறித்த பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. கணக்கீட்டாளர்கள், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று தொழில் செய்வோர் எத்தனை பேர், அது நிலையான தொழிலா அல்லது நிலையற்றதா, ஆண்டு வருமானம், தொழிலை எந்த துறையில் பதிவு செய்துள்ளார்கள், தொழிலில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர், தொழிலில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா, ஏற்றுமதி, இறக்குமதி விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது. மேலும், இந்த கணக்கெடுப்பு பணியை 45 நாட்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்.

Related Stories: