கரூர் நகராட்சி பகுதியில் காலியிடங்களில் வளர்ந்த சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு

கரூர், ஆக. 11: கரூர் நகராட்சி பகுதி காலியிடங்களில் அதிகளவு வளர்ந்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதித்து வரும் சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான தாந்தோணிமலை, சணப்பிரட்டி, இனாம்கரூர், வடிவேல் நகர், வேலுசாமிபுரம் போன்ற பகுதிகளை சுற்றிலும் அதிகளவு தனியாருக்கு சொந்தமான காலியிடங்கள் உள்ளன. இதில் குறிப்பாக கரூர் நகராட்சியில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ள தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளில்தான் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அனைத்து அலுவலகங்களும் தாந்தோணிமலை பகுதியில் உள்ளதால், பல்வேறு தரப்பினர்களும் இந்த பகுதியில் அதிகளவு இடங்களை வாங்கி போட்டுள்ளனர். இந்த இடங்களில் கட்டிடங்கள் எதுவும் கட்டாத நிலையில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்களால் இந்த பகுதியில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் மாவட்டங்களில் கரூரும் ஒன்றாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலியிடங்களில் படர்ந்திருந்த முட்புதர்களை அந்தந்த நிலத்தின் உரிமையாளர்களே அகற்ற வேண்டும். இயலாத பட்சத்தில், மாவட்ட நிர்வாகம் அகற்றி அதற்கான தொகையை வசூலித்து விடும் என அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் நகராட்சி பகுதியில் உள்ள காலியிடங்களில் படர்ந்திருந்த முட்புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. ஆண்டுகள் கடந்த நிலையில், திரும்பவும் பல பகுதிகளில் சீமை கருவேல முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளதோடு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு மற்றும் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்தி, காலியிடங்களில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: