சிவகாசி சாட்சியாபுரம் சாலையில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு

சிவகாசி, ஆக. 8: சிவகாசி அருகே, சாட்சியாபுரத்தில், சாலையோரம் தற்காலிக கடைகளை அமைத்து, கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி அருகே, ஆனையூர் ஊராட்சியில் மேற்கு சாட்சியாபுரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிவகாசி நகராட்சியில் இருந்து அரை கி.மீ தொலைவில் இப்பகுதி இருப்பதால் குடியிருப்புகள், கடைகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இப்பகுதியில் அதிகமாக குடியேறுகின்றனர். இங்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தின் எதிரே, சிவகாசி-திருவில்லிபுத்தூர் மெயின் ரோடு அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இங்கு போக்குவரத்து தடுப்பு எதுவும் இல்லாததால், திடீரென வாகனங்கள் திரும்புகையில் விபத்து ஏற்படுகிறது.

எனவே, ஆர்டிஓ அலுவலகம் எதிரே,  போக்குவரத்து தடுப்பு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாட்சியாபுரம் பஸ்நிலைய பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி, ஓட்டல்கள் உள்ளன. இந்த  கடைகளுக்கு டூவீலர், கார்களில் வருவோர் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், திருவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தவிர சாலையின் இருபுறமும் வியாபாரிகள் தற்காலிக பழக்கடை, நடைபாதை கடைகள் அமைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பஸ்நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடங்களில் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பஸ்களை நடுச்சாலையில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இப்பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலவலகம், பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லும் அதிகாரிகளும் இது குறித்து கண்டுகொள்வதில்லை. எனவே, சாட்சியாபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்களை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: